பெண் ஊழியரை கட்டியணைத்து முத்தமிட்ட மேலாளர் - கோர்ட்டு அளித்த பரபரப்பு தீர்ப்பு

அலுவலகத்தில் பெண் ஊழியரை முத்தமிட்ட மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.;

Update:2025-06-01 22:19 IST

பீஜிங்,

கிழக்கு சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தின் கிங்டாவோவில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் உற்பத்தி மேற்பார்வையாளராக லின் என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஷி என்ற பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அலுவலகப் படிக்கட்டுகளில் லின், தனது சக ஊழியரான ஷியை கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தன. இருப்பினும் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்த லின், மீண்டும் தன்னை பணியில் அமர்த்தவும் தனக்கு இழப்பீடு வழங்க கோரியும் தனது நிறுவனத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது பணிநீக்கம் சட்டப்பூர்வமானது என்று தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லின் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, லின்னுடன் தனக்கு நேர்மறையான உறவு இருப்பதாக ஷி கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார். மேலும் லின் தனக்கு எந்த பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களையும் விடுக்கவில்லை என்று ஷி தெரிவித்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் லின்னை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும், அவரது பணிநீக்க காலத்திற்கு இழப்பீடாக 1.13 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.33 கோடி) வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கடந்த 2017-ம் அண்டு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தகவல்களை கடந்த மே 22-ந்தேதி ஷாங்காய் பொது தொழிற்சங்கம் இணையதளத்தில் மீண்டும் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்