ஈரானில் பரவிய வன்முறை, போராட்டம்; ஒரு வாரத்தில் 16 பேர் பலி
டிரம்பின் அச்சுறுத்தலான அறிவிப்பும் ஈரானின் பல்வேறு மாகாணங்களில் அமைதியற்ற நிலை ஏற்பட ஒரு காரணியாக அமைந்துள்ளது.;
தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. பொருளாதார தேக்கநிலையும் காணப்படுகிறது.
இதனால், அரசுக்கு எதிரான குடிமக்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்க அரசு, பாதுகாப்பு படையினரை இறக்கி விட்டு உள்ளது. ஒருபுறம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், வன்முறை, போராட்டத்தில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர். இதுபற்றி உள்ளூர் அரசு ஊடகம் மற்றும் மனித உரிமை குழுக்கள் கூறும்போது, பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்தும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இதன்படி, ஒரு வாரத்தில் 16 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் நடவடிக்கை எடுக்க கூடும் என்ற டிரம்பின் அச்சுறுத்தலான அறிவிப்பும் ஈரானின் பல்வேறு மாகாணங்களில் அமைதியற்ற நிலை ஏற்பட ஒரு காரணியாக அமைந்துள்ளது.