நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் - ஹங்கேரியில் நடந்த நூதன கொண்டாட்டம்
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் நீச்சல் உடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வித்தியாசமாக வேடமணிந்திருந்தனர்.;
புடாபெஸ்ட்,
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதற்கு ஏற்றவாறு அங்குள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகர் புடாபெஸ்ட்டில் நூதன முறையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. அந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் நீச்சல் உடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வித்தியாசமாக வேடமணிந்திருந்தனர்.
கடுமையான குளிரில் இத்தகைய உடையணிந்து அவர்கள் உற்சாகமாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். செல்லும் வழியில் குழந்தைகளுக்கு இனிப்புகள், மிட்டாய்களை வழங்கினர். குளிருக்கு நடுவே உடலின் வெப்பத்தை தக்கவைப்பதற்காக ஆங்காங்கே கூட்டமாக நின்று உடற்பயிற்சிகளை செய்தனர். அதோடு, பண்டிகையை வரவேற்கும் விதமாக கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.