கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

உயிரிழந்த ரன்வீர் சிங், சமீபத்தில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர் படிப்பு படிப்பதற்காக கனடா சென்றிருந்தார்.;

Update:2025-12-15 18:57 IST

ஒட்டாவா,

கனடாவின் எட்மாண்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், காரில் அமர்ந்திருந்த 2 நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அதன்படி பஞ்சாப்பின் பாரே கிராமத்தை சேர்ந்த குர்தீப் சிங்(வயது 27) மற்றும் ரன்வீர் சிங்(வயது 19) ஆகிய இருவர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காக காரில் வந்து ஏறியுள்ளனர். அந்த சமயத்தில்தான் இருவர் மீதும் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் காரில் வந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், குற்றவாளிகள் வேறு யாரையோ கொலை செய்ய திட்டமிட்டு, அதற்கு பதில் குர்தீப் சிங் மற்றும் ரன்வீர் சிங் மீது தவறுதலாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த குர்தீப் சிங் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கனடா சென்றுள்ளார். அங்கு தங்கி பணிபுரிவதற்கான பணி அனுமதி ஒப்புதலை பெறுவதற்காக அவர் விண்ணப்பித்திருந்தார். அதே சமயம் ரன்வீர் சிங், சமீபத்தில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர் படிப்பு படிப்பதற்காக கனடா சென்றிருந்தார்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த ரன்வீர், அவரது பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவரை இந்தியாவிலேயே படிக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். கனடாவில் ஏற்கனவே அவர்களின் உறவினர்கள் சிலர் இருந்ததால், ரன்வீரின் பெற்றோர் அவரை கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சூழலில், தற்போது அவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்