எல்லையில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை நிறுத்திய தென்கொரியா
தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் வடகொரியா உடனான உறவில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அமைதியை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.;
சியோல்,
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது. இதனை தொடர்ந்து தென்கொரிய எல்லைக்குள் ராட்சத குப்பை பலூன்களையும் பறக்க விட்டு மேலும் பதற்றத்தை தூண்டியது. இதற்கு பதிலடியாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை கடந்த ஆண்டு தென்கொரியா மீண்டும் தொடங்கியது. அதாவது தென்கொரிய எல்லை பகுதியில் வடகொரிய எதிர்ப்பு பிரசாரம் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்தநிலையில் தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் வடகொரியா உடனான உறவில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அமைதியை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தற்போது எல்லை பகுதியில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை தென்கொரியா நிறுத்தி உள்ளது. இது இரு நாடுகளின் எல்லை பகுதியில் ஏற்படும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கை என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.