உலகம் அழியும் என கூறியவர் கைது
டிசம்பர் 25-ம் தேதி உலகம் அழியப்போகிறது என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்தினார் எபோ நோவா.;
கானா,
மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும். இந்த ஊரில் இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியதே கைதுக்கு காரணம் என்று தெரிகிறது.எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரப் பேழையை (ஆர்க்) கட்டும் வீடியோக்கள் வைரலாகி உலக அளவில் பிரபலமானார்.
நோவாவின் பேழை போல மூன்று ஆண்டுகள் வெள்ளப்பெருக்கு வரும் என்று கூறி, மக்களை மனந்திரும்புமாறு அழைப்பு விடுத்தார். இதனால் அவரது ஊரில் பேழை கட்டும் இடம் சுற்றுலாத் தலமாக மாறியது. பலர் அங்கு சென்று பார்வையிட்டனர்.கடந்த வாரம் எபோ நோவா தனது தீர்க்கதரிசனத்தை மாற்றினார்.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் அன்று என்னுடைய வேண்டுதலை கடவுள் ஏற்றுக்கொண்டு விட்டார். அதனால் உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவைத்திருக்கிறார் அதனால் தொடர்ந்து இன்னும் பல பேழைகளை கட்டப் போகிறேன். அதற்கு எனக்கு கடவுள் போதிய நேரம் கொடுத்திருக்கிறார் என்று கூறிய அவர் நோவாவை தேடி வந்த மக்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் மகிழ்ச்சியாய் இருங்கள் என கூறினார். இதனால் மக்கள் கோபடைந்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி காவல்துறை கைது செய்தது.