புதினுடனான பேச்சுவார்த்தை; டிரம்புக்கு பின்னணியில் செயல்படும் ரகசிய பெண்மணி
உக்ரைன் அமைதி ஒப்பந்தம் தொடர்பான டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு பின்னணியில் பலம் வாய்ந்த பெண்மணியாக அவர் செயல்படுவார்.;
லண்டன்,
உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த விவகாரத்தில் புதின் சற்று இறங்கி வந்துள்ளார். இதன்படி, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வருகிற 15-ந்தேதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை டிரம்ப், அவருடைய ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.
எனினும், இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அச்சம் கொண்டுள்ளார். ஆனால், உக்ரைன் விசயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு முழு வடிவம் பெறுவதற்கு ரகசிய நபராக ஒருவர் செயல்படுவார் என இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
டிரம்பின் பின்புலத்தில் இருந்து அவர் செயல்படுவார். அவர்தான் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப். புதினின் நோக்கங்கள் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இல்லை என ஜெலன்ஸ்கி தொடர்ந்து கூறி வருகிறார். அதற்கேற்ப, தொடர்ந்து ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பொருளாதார தடைகள் உள்ளிட்ட எந்தவித தடையையும் ரஷியா லட்சியம் செய்யாமல் போரில் ஈடுபட்டு வருகிறது.
இதனை யூகித்த மெலனியா, அதுபற்றிய சந்தேகங்களை எழுப்பி, ரஷியாவின் நோக்கங்கள் என்ன என்பது பற்றி கேள்வி எழுப்பும்படி டிரம்பை தூண்டியுள்ளார். இதனால், புதினின் ராஜதந்திரம் தடம் புரளும் வகையில் செயல்பட்டு, அமெரிக்காவின் கொள்கையை மெலனியா உயர்த்தி பிடிப்பாரா? என உலக நாடுகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. மெலனியா வருகிற செப்டம்பரில் இங்கிலாந்துக்கு செல்வார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
புதினுடனான, உக்ரைன் அமைதி ஒப்பந்தம் தொடர்பான டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு பின்னணியில் பலம் வாய்ந்த பெண்மணியாக மெலனியா செயல்படுவார் என கூறப்படுகிறது. கடந்த காலங்களில் மெலனியா கூறும்போது, டிரம்புக்கு நான் அறிவுரை கூறினேன். அதனை சில சமயங்களில் அவர் கவனிப்பார் என்றார்.
டிரம்பின் நிர்வாகத்தில், அதிக செல்வாக்கு மிக்க 10-வது நபராக மெலனியா இருக்கிறார் என நடப்பு ஆண்டின் பிப்ரவரியில் நடந்த சர்வே ஒன்று தெரிவிக்கின்றது. ஸ்டீபன் மில்லர் மற்றும் அட்டர்னி ஜெனரல் பாம் போண்டிக்கு அடுத்த நிலையில் மெலனியா உள்ளார்.
2-வது முறையாக டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, தன்னுடைய சிந்தனையை ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்தவர் மெலனியா என வெளிப்படையாகவே டிரம்ப் கூறினார். அதனால், இந்த முறை புதினுடனான டிரம்பின் பேச்சுவார்த்தையில் மெலனியாவின் பங்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.