கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட விவகாரம் - ஒரு பெண் உள்பட 3 பேர் கைது
துப்பாக்கி சூடு நடத்துவதற்காக 15 வயது சிறுவனுக்கு 4,800 டாலர் பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.;
பொகோட்டா,
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் பதவிக்கான நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தலைநகர் பொகோட்டாவில் உள்ள ஒரு பூங்காவில் பழமைவாத கட்சியின் அதிபர் வேட்பாளர் யூரிப் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை நோக்கி நடந்த துப்பாக்கிச்சூட்டில் தலை மற்றும் காலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது உடலில் பாய்ந்த குண்டுகள் மருத்துவர்களால் அகற்றப்பட்டன.
தற்போது யூரிப் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பழமைவாத கட்சி சார்பில் தேர்தல் பிரசார பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், யூரிப் மீது துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது சிறுவனையும், அந்த சிறுவனுக்கு ஆயுதங்கள் வழங்கிய இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்துவதற்காக சிறுவனுக்கு 4,800 டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.13 லட்சம்) பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்துவதற்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.