முற்றிய மோதல்.. வெனிசுலா துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார்.;

Update:2025-12-30 22:19 IST

வாஷிங்டன்,

வெனிசுலா நாட்டில், டிரென் டே அராகுவா என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி தகர்த்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “அவர்கள் (கடத்தல் கும்பல்) படகுகளில் போதைப்பொருட்களை ஏற்றினர், எனவே நாங்கள் அனைத்து படகுகளையும், அவர்கள் பயன்படுத்திய அந்தப் பகுதியையும் தாக்கி உள்ளோம். அது அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்த இடமாகும். அது இப்போது இல்லை” என்று டிரம்ப் கூறினார்.

இருப்பினும் இத்தாக்குதல் குறித்து வெனிசுலா அரசு தரப்பு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. அதிபர் நிகோலஸ் மதுரா தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெனிசுலா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்காக வெனிசுலா எல்லையில் போர் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.

மேலும், வெனிசுலாவுக்கு சென்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்க படைகள் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளன. அதேவேளை, கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தபோதிலும், அமெரிக்கா போதைப்பொருள் கடத்தலுக்கான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

அமெரிக்காவின் இந்த தாக்குதலால் பசுபிக் கடல் பகுதியில் மோதல் முற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்