அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப்
கிரீன்லாந்தை பெறுவதற்கு நேட்டோ உதவ வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.;
வாஷிங்டன்,
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, கிரீன்லாந்து உலகின் எட்டாவது பெரிய அரிதான கனிமங்களைக் கொண்டுள்ளது; அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு, தங்கம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்றவை அங்கு உள்ளன. சூப்பர் கண்டக்டர் சிப்புகள், மின்சார வாகனங்கள், பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பங்கள் தயாரிப்பதற்கு இந்த அரிதான கனிமங்கள் மிக அவசியமானவை. வகைப்படுத்தப்பட்ட 34 அரிதான கனிமங்களில், சுமார் 23க்கும் மேற்பட்ட அரிய கனிம வளங்கள் கிரீன்லாந்தில் உள்ளன. தற்போது, இந்தத் தனிமங்களின் மீதான ஏகபோக உரிமை சீனாவிடம் உள்ளது,
இந்தநிலையில், கிரீன்லாந்து வட அமெரிக்க கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதன் கட்டுப்பாடு முழுவதும் ஐரோப்பிய நாடான டென்மார்க் வசம்தான் உள்ளது. கிரீன்லாந்துக்கு ராணுவ பாதுகாப்பு கொடுத்து வருவது டென்மார்க்தான். எனவே டிரம்பின் பேச்சுக்கு டென்மார்க் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதனிடையே அமெரிக்கராக பிறப்பது என்பது, வரலாற்றின் லாட்டரியில் வெற்றி பெறுவதற்கு சமம்" என்று டிரம்ப் சொல்வதுண்டு. அப்படியான லாட்டரியே எங்களுக்கு வேண்டாம் என கிரீன்லாந்து மக்கள் கூற தொடங்கியுள்ளனர்.
இங்கு மொத்த மக்கள் தொகையே வெறும் 57,000 தான். சென்னையின் தி.நகர் ஏரியாவில் வசிக்கும் மக்கள் கூட இதைவிட அதிகமாக இருப்பார். இப்படி அரசியல் முக்கியம் இல்லாத இந்த நாட்டை, கைப்பற்றியே தீருவேன் என டிரம்ப் அடம்பிடிக்கிறார். காரணம் இங்குள்ள இயற்கை வளங்கள்தான்.
இந்தநிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம். கிரீன்லாந்தை பெறுவதற்கு நேட்டோ உதவ வேண்டும். அமெரிக்கா இல்லாமல் நேட்டோ வலுவாக இருக்க முடியாது. என நேட்டோவிற்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார். கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு கிடைக்காவிட்டால் ரஷியா, சீனா அந்நாட்டை கைப்பற்றிவிடும். அதை நடக்க விடமாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.