ஈரானில் தொடரும் போராட்டம்: பலி எண்ணிக்கை 2,571 ஆக உயர்வு
போராட்டங்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.;
தெஹ்ரான்,
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, அரசு மற்றும் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக ஈரானின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
போராட்டங்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே, போராட்டம் மற்றும் வன்முறைகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளது.உயிரிழந்தவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 18,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால், ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும், ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஈரானில் போராடும் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.