அரசுக்கு எதிரான போராட்டம்... விசாரணையே இன்றி முதல் நபரை இன்று தூக்கில் போடுகிறது ஈரான்

எர்பானுக்கு எதிராக கடவுளுக்கு எதிராக போர் செய்கிறார் என குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.;

Update:2026-01-14 12:15 IST

தெஹ்ரான்,

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே கராஜ் பகுதியில் கடந்த வாரம் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எர்பான் சொல்தானி (வயது 26) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் எந்தவித முறையான விசாரணையும் இன்றி இன்று தூக்கில் போடப்படுகிறார்.

இதுபற்றி நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட செய்தியில், எர்பானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 14-ல் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

இதுவரை போராட்டத்தில் 648 பேர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 9 பேர் சிறுவர்கள் ஆவர். எனினும், பலி எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்க கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையதள சேவை முடக்கம், இந்த தகவல்களை சரிபார்க்க முடியாத வகையில் நிலைமையை கடினப்படுத்தி விட்டது என தெரிவித்ததுடன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.

ஈரானின் விடுதலைக்காக குரல் கொடுத்தது மட்டுமே அவருடைய குற்றம் என குறிப்பிட்டு, எர்பானின் மரண தண்டனையை தடுத்து நிறுத்தும்படி சர்வதேச சமூகத்துக்கு ஈரானின் பல்வேறு உரிமை குழுக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

அவர் கடவுளுக்கு எதிராக போர் செய்கிறார் என குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. அவருக்காக வாதிடுவதற்கு வழக்கறிஞரின் அனுமதியும் மறுக்கப்பட்டு உள்ளது. ஈரானில் 31 மாகாணங்களில் உள்ள 100 நகரங்களில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 17-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்