அரசுக்கு எதிராக போராட தூண்டி விடுகிறார் டிரம்ப்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் கடிதம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொது செயலாளருக்கு ஈரான் முறைப்படி கடிதம் வழியே வேண்டுகோள் விடுத்துள்ளது.;
தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். போராடும் மக்கள் பாதிக்கப்பட்டால், ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவம் பாயும் என்றும் கூறினார். எனினும் பதிலுக்கு, உங்களுடைய சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள் என ஈரான் தலைவர் காமேனி கூறினார்.
ஈரானில், 2 வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட சூழலில், நீங்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள். உங்களுக்கு உதவி வந்து கொண்டிருக்கிறது என டிரம்ப் கூறியது சர்ச்சையானது.
இதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொது செயலாளருக்கு ஈரான் முறைப்படி கடிதம் வழியே வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதில், அமெரிக்கா வன்முறையை தூண்டி விடுவதுடன், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது. ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகிறது என அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளது.
டிரம்ப்பின் பேச்சுகள் ஈரானில் போராட்டம் தீவிரமடைய வழிவகுத்து உள்ளது. அது ஈரானின் இறையாண்மை மற்றும் தேச பாதுகாப்புக்கு ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கடிதத்தில் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே ஈரானை நேரடியாக தாக்காமல் ஈரானுடன் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு இறுதியானது என டிரம்ப் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். இந்நிலையில், ஈரானில் வன்முறையை தூண்டி, பரவ செய்யும் வகையில் அவர் பேசியது மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.