அமெரிக்க போர் கப்பல் அத்துமீறல்; எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரானின் எல்லை பகுதியில் இருந்து எவ்வளவு தொலைவில் அமெரிக்க போர் கப்பல் இருந்தது என்பது பற்றிய உடனடி தகவல் கிடைக்கப்பெறவில்லை.;

Update:2025-07-24 08:10 IST

தெஹ்ரான்,

ஈரானின் கடல் எல்லை பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறி நுழைந்தது என கூறப்படுகிறது. இது சர்வதேச விதிமீறல் என ஈரான் தெரிவித்து உள்ளது. இதனால், அமெரிக்க போர் கப்பலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இதுபற்றி ஈரானின் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது. இதனையடுத்து, ஈரானிய படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்று அதனை எதிர்கொண்டது.

அந்த ஹெலிகாப்டர், நேராக கப்பலின் மேல் பறந்து சென்றபடி, எச்சரிக்கை விடுத்தது. அப்போது, அதற்கு பதிலளிக்கும் விதத்தில் அமெரிக்க கப்பல் செயல்பட்டது, ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தியது.

ஈரான் ஹெலிகாப்டர் அந்த பகுதியை விட்டு செல்லவில்லை என்றால், அதனை இலக்காக கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் விமான பாதுகாப்பு படையினர் பதிலுக்கு, அந்த ஹெலிகாப்டர், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளது என பதிலளிக்கப்பட்டது. இறுதியாக, அமெரிக்க கப்பல் தெற்கு நோக்கி பின்வாங்கி சென்றது என தெரிவித்தது.

ஆனால், அமெரிக்க மத்திய படை வெளியிட்ட செய்தியில், பாதுகாப்பான மற்றும் தொழில்முறையிலான உரையாடலாகவே இருந்தது என்றும் அதனால், அமெரிக்க கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தது.

இதுதவிர மற்ற விசயங்கள் எதுவும் பொய்யானவை. அதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப ஈரான் முயற்சிக்கிறது என தெரிவித்தது. ஈரானின் எல்லை பகுதியில் இருந்து எவ்வளவு தொலைவில் அமெரிக்க போர் கப்பல் இருந்தது என்பது பற்றிய உடனடி தகவல் கிடைக்கப்பெறவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்