வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கிய ஆந்திர எம்.எல்.ஏ. - கைது செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு

ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஆளும் கட்சி எம்.எல்.ஏ. அடித்து நொறுக்கும் காட்சி வைரலான நிலையில், அவரை கைது செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-22 19:49 GMT

விஜயவாடா,

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் கடந்த 13-ந்தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் நேரத்திலும், முடிந்தபிறகும் அங்கு வன்முறை நடந்தது. இதனையடுத்து மாநில தலைமைச்செயலாளரையும், போலீஸ் டி.ஜி.பி.யையும் தலைமை தேர்தல் கமிஷன் நேரில் அழைத்து கண்டித்தது. மேலும் சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததோடு, சிலரை பணியிடமாற்றமும் செய்தது.

இதற்கிடையே ஆந்திராவின் பல்நாடு மாவட்டம் மச்சர்லா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பலவாக்கேட் வாக்குச்சாவடியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இ்ந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்பின்னர் மாநில தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா தலைமை தேர்தல் கமிஷனுக்கு புகார் தெரிவித்தார்.அதன்பேரில் எம்.எல்.ஏ.வை கைது செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் ஆந்திர போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அதே சமயம், வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள 'சிப்' சேதம் அடையாததால், அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டியதில்லை என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்