பிரசாரத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள் - பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2024-05-22 12:09 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள், குற்றச்சாட்டுகள் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜே.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில், இருகட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மதம் மற்றும் வகுப்புவாத ரீதியில் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பா.ஜ.க.வுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், "சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பிரசாரங்களை நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளது.

அதேபோல் காங்கிரசுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், "இந்திய அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டுவிடும் என்பது போன்ற தவறான கருத்துக்களை பிரசாரத்தில் சொல்லக்கூடாது. அக்னி வீர் திட்டம் குறித்து பேசும்போது நாட்டின் பாதுகாப்பு படைகளை அரசியலாக்க கூடாது." என்று கூறியுள்ளது.

மேலும், "தேர்தல் பிரசாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்களின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கும் வகையிலான பிரசாரங்கள் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது" என்று இருகட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காங்கிரஸ் கட்சி முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பா.ஜ.க. நாட்டின் சமூக கட்டமைப்பு, தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்