நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- கோவை

கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

Update: 2024-03-29 09:39 GMT

கோவை,

தொழில்துறையினர், அரசு ஊழியர்கள், சிறுபான்மை மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நிறைந்துள்ள கோவை நாடாளுமன்ற தொகுதி 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிலையில், 1977-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அதன் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெற்று வந்தது. பின்னர் 2008-ம் ஆண்டு தொகுதி வரையறை மூலம் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

அதன்படி கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கோவை நாடாளுமன்ற தொகுதியின் கடந்தகால வரலாற்றை புரட்டி பார்க்கும்போது, கம்யூனிஸ்டு கட்சி 7 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், தி.மு.க. 2 முறையும், பாரதீய ஜனதா 2 முறையும், அ.தி.மு.க. ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

கம்யூனிஸ்டு கட்சிகள் 7 முறை வெற்றி

1952-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.எம்.லிங்கம் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.1957-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பார்வதி கிருஷ்ணன், 1962-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 1967-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.ரமணி, 1971-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பாலதண்டாயுதம், 1977-ம் ஆண்டு பார்வதி கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 1980-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த ரா.மோகன் வெற்றி பெற்றார்.

1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.கே.குப்புசாமி வெற்றி பெற்று இந்த தொகுதியை 7 ஆண்டுகளாக தன் வசம் வைத்து இருந்தார்.

1996-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த மு.ராமநாதன் வெற்றி பெற்றார். 1998, 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 2 முறை வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.சுப்பராயன் வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.பி.நாகராஜன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் ஏ.பி.நாகராஜன் 4,31,717 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 ஓட்டுகளும் பெற்றனர். கடைசியாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் 5,70,514 ஓட்டுகள்பெற்று வெற்றி பெற்று 2-வதுமுறையாக எம்.பி. ஆனார். இதற்கு அடுத்ததாக பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,91,505 ஓட்டுகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ரா.மகேந்திரன் 1,44,829 ஓட்டுகள் பெற்றார்.

தொழில் நகரம்

கோவை நாடாளுமன்ற தொகுதி இன்னும் வளர்ச்சி பெற வேண்டிய தொகுதியாகவே உள்ளது. விசைத்தறி, ஜவுளி, மோட்டார் பம்ப் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆகியவை பிரதான தொழில்களாக உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனிகளும் அதிக அளவில் பெருகி உள்ளன. தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனர்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் கவுண்டர் சமுதாயத்தினர் 25 சதவீதம், நாயுடு சமூகத்தினர் 17 சதவீதம், தாழ்த்தப்பட்டவர்கள் 24 சதவீதம், இதர சாதியினர் 10 சதவீதம், பழங்குடியினர் 0.28 சதவீதத்தினரும் உள்ளனர். மத அடிப்படையில் இந்துக்கள் 80 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 5 முதல் 10 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 6 சதவீதம் பேரும், ஜெயின் சமூகத்தினர் 1.5 சதவீதம் பேரும் உள்ளனர். 85.5 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்க்கப்படாத பிரச்சினை

கோவை நாடாளுமன்ற தொகுதியில் நீண்டநாள் பிரச்சினை என்று பார்த்தால், மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டம் வெறும் அறிவிப்புடன் நிற்கிறது. எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை. விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் 95 சதவீதம் அளவுக்கு கையகப்படுத்தப்பட்டாலும், விமானநிலைய விரிவாக்கப்பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. உக்கடம் மேம்பால பணிகள் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அது தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. உக்கடம் மேம்பாலத்தை போக்குவரத்துக்கு திறந்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

கோவை நகரில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் அமலுக்கு வந்தாலும், கூடுதல் குடிநீர் இன்னும் சப்ளை செய்யப்படவில்லை. 24 மணிநேர குடிநீர் திட்டம் மந்தநிலையில் நடைபெறுகிறது. கோவை நகரில் ஜி.எஸ்.டி மற்றும் மின்கட்டண உயர்வு பிரச்சினை காரணமாக சிறுதொழில் மையங்கள் மற்றும் பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையாமல் பாதிக்கப்பட்டுள்ளன. கோவையில் இருந்து தூத்துக்குடிக்கும், திருச்செந்தூருக்கும் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

கடந்த தேர்தல் ஓட்டு நிலவரம், கோவை நாடாளுமன்ற தொகுதி.

பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) - 5,70,514 (வெற்றி)

சி.பி.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா) -3,91,505

ரா.மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) -1,44,829

ச.கல்யாண சுந்தரம் (நாம் தமிழர்) 60,400

என்.ஆர்.அப்பாதுரை (அ.ம.மு.க.) -38,024.

வெற்றி யார் கையில்?

கோவை நாடாளுமன்ற தொகுதி இந்த கட்சிக்குதான் வெற்றி என்று இல்லாமல் கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக கம்யூனிஸ்டு கட்சிகள் 7 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி தமிழகம் முழுவதும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

28 ஆண்டுகளுக்கு பின்னர் தி.மு.க. கோவை நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கி உள்ளது. இதற்காக கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கி வெற்றி ஈட்டி கொடுத்த இந்த தொகுதியை தி.மு.க. தனதாக்கி களத்தில் நிற்கிறது. வெற்றியையும் தனதாக்க தீவிரமாக முயற்சிக்கிறது.

தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் கோவை மாநகர மேயராக பதவி வகித்தவர். அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் சேர்ந்து அவைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மறைந்த கோவிந்தராஜனின் மகனும், அ.தி.மு.க. ஐ.டி. விங் மாநில தலைவருமான சிங்கை ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படும் கோவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சூலூர், பல்லடம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் என்று 5 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். மொத்தத்தில் 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றிபெற்றுள்ளதால் அந்த தைரியத்துடன் தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அ.திமு.க. தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதால், நாடாளுமன்ற தொகுதியையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் மாநில தலைவர் அண்ணாமலையை பா.ஜனதா களத்தில் இறக்கிவிட்டுள்ளது. வேட்பாளராக தன்னை அறிவித்ததும் அண்ணாமலை பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பா.ஜனதா தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஊட்டசத்து நிபுணரான கலாமணி களம் இறக்கப்பட்டு உள்ளார்.

கடந்த முறை வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பெரிய அளவிலான திட்டங்களை கோவைக்கு கொண்டுவரவில்லை என்றும், போராட்ட களங்களில் மட்டுமே எம்.பி.யை பார்க்க முடிந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

கோவை நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றுவதில் தி.மு.க., அ.தி.மு.க., பா. ஜனதா என்று போட்டிபோட்டு களத்தில் குதித்துள்ளதால் இந்த தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. இதற்காக தலைவர்களை பிரசார களத்தில் இறக்குகின்றன. ஏற்கனவே ரோடுஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி மீண்டும் அண்ணாமலைக்காக பிரசாரம் செய்ய கோவை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இந்த தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

மொத்தத்தில் இந்த தொகுதி கட்சி வாக்காளர்களைவிட, பொதுமக்களின் ஓட்டுகளை அதிகம் பெறும் கட்சியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் 52 ஆயிரத்து 575 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் வாக்காளர்கள் ஆகும்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, கோவை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:-

சூலூர் (அ.தி.மு.க. வெற்றி)

வி.பி.கந்தசாமி (அ.தி.மு.க.) -1,18,968

பிரிமியர் செல்வம் (தி.மு.க.) -87,036

இளங்கோவன் (நாம்தமிழர்)- 14,426

ரங்கநாதன் (மக்கள்நீதிமய்யம்) -12,658

கோவை வடக்கு (அ.தி.மு.க. வெற்றி)

அம்மன் அர்ச்சுனன் (அ.தி.மு.க.) -81,454

சண்முகசுந்தரம் (தி.மு.க.) - 77,453

என்.ஆர்.அப்பாதுரை (அ.ம.மு.க.) -1,659

தங்கவேலு (மக்கள் நீதிமய்யம்) - 26,503

கவுண்டம்பாளையம் (அ.தி.மு.க. வெற்றி)

பி.ஆர்.ஜி.அருண்குமார் (அ.தி.மு.க.) -1,35,669

பையாகவுண்டர் (தி.மு.க.) -1,25,893

பங்கஜ் ஜெயின் (மக்கள் நீதி மய்யம்) -23,527

கலைவாணி (நாம்தமிழர்) -17,897

அருணா (அ.ம.மு.க.) -2002

சிங்காநல்லூர் (அ.தி.மு.க. வெற்றி)

கே.ஆர்.ஜெயராமன் (அ.தி.மு.க.) -81,244

நா.கார்த்திக் (தி.மு.க.) -70,390

மகேந்திரன் (மக்கள்நீதி மய்யம்) -36,855

நர்மதா (நாம்தமிழர்) -8,366

கோவை தெற்கு (பா. ஜனதா வெற்றி)

வானதிசீனிவாசன் (பா,ஜனதா) -53,209

கமல்ஹாசன் (மக்கள் நீதிமய்யம்) -51,481

மயூரா ஜெயக்குமார் (காங்கிரஸ்) -41,801

அப்துல் வகாப் (நாம் தமிழர்) -4,300

சேலஞ்சர்துரை (அ.ம.மு.க.) -690

பல்லடம் (அ.தி.மு.க.வெற்றி)

எம்.எஸ்.எம். ஆனந்தன் (அ.தி.மு.க.) - 1,26,903

கே.முத்துரத்தினம் (ம.தி.மு.க.) -94,212

Tags:    

மேலும் செய்திகள்