'பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார்' - பிரியங்கா காந்தி

பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள் ஆனால் பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-26 16:34 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மக்கள் பணவீக்கம் குறித்து கவலையில் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி இந்து-முஸ்லிம் பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார்.

'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும். அம்பானி மற்றும் அதானிக்காக பிரதமர் மோடி காலியாக வைத்துள்ள 30 லட்சம் பணியிடங்களை நாங்கள் நிரப்புவோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்த போதெல்லாம் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விவசாயம் தொடர்பான அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. வரியை நீக்குவோம்.

பிரதமரின் வாயில் இருந்து பணவீக்கம் என்ற வார்த்தை வருவதே இல்லை. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.400 ஆக இருந்தபோது, மந்திரி ஒருவர் சாலையில் சிலிண்டருடன் அமர்ந்து தர்ணா செய்தார். ஆனால் இன்று பெட்ரோல், டீசல், காய்கறிகள், சிலிண்டர், எண்ணெய் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. பணவீக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்."

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்