'ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை' - திருமாவளவன்

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை என திருமாவளவன் தெரிவித்தார்.

Update: 2024-05-26 15:51 GMT

சென்னை,

சென்னை புரசைவாக்கத்தில் அனைத்திந்திய பாங்க் ஆப் பரோடா ஓ.பி.சி. தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் சார்பில், 8-வது 'ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம்' நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி அண்மைக் காலமாக பேசி வரும் கருத்துக்கள் யாவும் அவர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் தாலியை பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடுவார்கள் என்றும், அயோத்தி ராமர் கோவிலை இடித்து விடுவார்கள் என்றும் பா.ஜ.க.வினர் பேசி வருவது அவர்களின் பதற்றத்தைக் காட்டுகிறது.

'இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார். 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்கப் போகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவ்வாறு இருப்பதில் என்ன தவறு?

'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் கட்டுக்கோப்பாக இருக்கும். அதுவும் ஒரு ஜனநாயக முறையிலான முன்னெடுப்புதான். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை. அப்படி ஒரு நடைமுறை வந்தால் அதை வரவேற்கவும், அங்கீகரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்