துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள்.;

Update:2025-08-19 11:25 IST

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி தேர்தல்

நாட்டின் முதல் குடிமகன் என்று ஜனாதிபதி சிறப்பிக்கப்படுவதுபோல், 2-வது குடிமகன் என்று கவுரவிக்கப்படுபவர், துணை ஜனாதிபதி. அந்த வகையில், நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக இருந்து வந்த ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த மாதம் (ஜூலை) 21-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து, புதிதாக துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆளுங்கட்சியான பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மராட்டிய மாநில கவர்னரும், தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சியான 'இந்தியா' கூட்டணி சார்பில் வேட்பாளராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் வரும் 21-ந் தேதி நிறைவடைய இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.

வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள். அந்த வகையில், மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். அதில், தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் ஒரு இடம் காலியாக உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, மொத்தம் 782 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.

இதைவைத்து பார்க்கும்போது, துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 392 வாக்குகள் தேவை. தற்போதைய நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் 293 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 130 உறுப்பினர்களும் ஆதரவாக உள்ளனர். இதை கணக்கில் எடுத்துக்கொண்டால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 423 வாக்குகள் கிடைக்கும் நிலை உள்ளது. மெஜாரிட்டிக்கு 392 வாக்குகளே போதும் என்பதால், சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதியாகியுள்ளது.

செப்டம்பர் 9-ந் தேதி வாக்குப்பதிவு

தேர்தல் நாளான செப்டம்பர் 9-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு, இரவு 7.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால், இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்பார். ஏற்கனவே, தமிழகத்தை சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன், ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்துள்ளனர். இதில், ஆர்.வெங்கட்ராமன் துணை ஜனாதிபதியாகவும் இருந்துள்ளார்.

இதேபோல், நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திருத்தணியை சேர்ந்தவர் என்றாலும், தெலுங்கு மொழி பேசுபவர். அதேபோல், 3-வது துணை ஜனாதிபதியாக வி.வி.கிரி, மதராஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர் என்றாலும் அவரும் தெலுங்கு மொழி பேசுபவர்தான். அந்த வகையில், சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 2-வது துணை ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார்.

 

Tags:    

மேலும் செய்திகள்