4-வது டி20: இந்திய அணிக்கு எதிராக தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் - ஆஸி.கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.;

Update:2025-11-07 10:23 IST

கோல்டுகோஸ்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ், ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 168 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், அக்‌ஷர் படேல், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அக்‌ஷர் படேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை (சனிக்கிழமை) பிரிஸ்பேனில் நடக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், “இந்த மைதானத்தில் 167 ரன்கள் சேசிங் செய்யக்கூடிய ஸ்கோர் என்று நினைத்தேன். ஆனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சில சவால்களை கொடுத்தது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், உங்களுக்கு ஒரு சில பார்ட்னர்ஷிப்கள் தேவைப்படும், ஆனால் எங்களால் அதை உருவாக்க முடியவில்லை.

இந்தியா ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி. அதற்கேற்றாற்போல் மிகச்சிறப்பாக விளையாடினர். அவர்களை வீழ்த்த ஒவ்வொரு போட்டியிலும் உங்கள் முழு பலம் கொண்ட அணி இருக்க வேண்டும். ஆனால் எங்களது முன்னணி வீரர்கள் சிலர் ஆஷஸ் தொடரை முன்னிட்டு வெளியேறி விட்டனர்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதையும் நாங்கள் விரும்புகிறோம். அதிக அழுத்தத்துடன் கூடிய இதுபோன்ற ஆட்டங்களில் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும், அது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்