முகம்மது சிராஜ் அதிர்ஷ்டம் இல்லாதவர்; வெளிப்படையாக சொன்ன டி வில்லியர்ஸ்
முகமது சிராஜுக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து டி வில்லியர்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.;
ஜோகன்னஸ்பர்க்,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 20 ஓவர் உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக இந்தியா உள்ள நிலையில், இந்த முறை தாய்மண்ணில் போட்டிகள் நடைபெறுவதால் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு இடம் கிடைக்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.
இந்த நிலையில், முகமது சிராஜுக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி வில்லியர்ஸ் கூறியிருப்பதாவது:-“முகமது சிராஜ் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும், டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சிராஜ் அதிர்ஷ்டம் இல்லாதவர். ஏனெனில் இந்திய அணியில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். எனவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் சிறிதளவு பேட்டிங் தெரிந்த வீரராக இருக்க வேண்டும் என்பதற்காக ஹர்ஷித் ராணாவை அவர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.
ஹர்திக் பாண்ட்யாவும் பேட்டிங் செய்யக்கூடியவர். அதேபோல், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் முழுநேர வேகப்பந்து வீச்சாளராக இருக்கக் கூடாது என்று தேர்வுக் குழுவினர் நினைத்திருக்கலாம். அதனாலேயே முகமது சிராஜை தவிர்த்து ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்துள்ளனர். இந்திய அணி தற்போது பேட்டிங்கில் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக செயல்படுகிறது. அதுவும் சிராஜ் தேர்விற்கு தடையாக இருந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.