ஆஸ்திரேலிய தொடரில் அபிஷேக் சர்மா அசத்துவார் - டி வில்லியர்ஸ்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.;
கோப்புப்படம்
கேப்டவுன்,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியா மைதானங்களில் அசத்துவார் என டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சூர்யகுமார் யாதவ் ஒரு கேப்டனாக அற்புதமாக செயல்பட்டு இருக்கிறார். அவருடைய அணுகுமுறை வீரர்களுக்கு இடையே மிகச்சிறப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது. அபிஷேக் சர்மா தற்போது தனது வாழ்வின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். டி20 போட்டிகளில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் ஆஸ்திரேலிய மைதானங்களிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை அவர் விரும்பி விளையாடுவார். அதோடு ஆப் சைடு, லெக் சைடு என எந்த திசையிலும் அவரால் நன்றாக அடிக்க முடியும். அதனால் நிச்சயம் இந்த ஆஸ்திரேலியா மைதானங்களில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.