ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக சாதனை படைத்த கான்வே - லதாம் ஜோடி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.;
image courtesy:ICC
மவுன்ட் மாங்கானு,
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லதாம், கான்வே களம் புகுந்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். அபாரமாக ஆடிய கான்வே 147 பந்துகளில் தனது 6-வது சதத்தை எட்டினார். மறுமுனையில் டாம் லதாம் 183 பந்துகளில் தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் ரன் எண்ணிக்கை 86.4 ஓவர்களில் 323 ரன்களாக உயர்ந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது. லதாம் 137 ரன்னில் கேட்ச் ஆனார்.
இதன் மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.
அந்த பட்டியல்:
1. கான்வே & லதாம் - 323 ரன்கள்
2. ரோகித் சர்மா & மயங்க் அகர்வால் - 317 ரன்கள்
3. அபித் அலி & ஷான் மசூத் - 278 ரன்கள்
4. அப்துல்லா ஷபிக் & இமாம் உல் ஹக் - 252 ரன்கள்
5. ஜாக் கிராலி & பென் டக்கெட் - 233 ரன்கள்
தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 155 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. கான்வே இரட்டை சதம் (227 ரன்கள்) அடித்து அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் அடித்துள்ளது. ஜான் கம்பெல் 45 ரன்களுடனும், பிரண்டன் கிங் 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.