ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த இலங்கை
மழை காரணமாக இந்த போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.;
துபாய்,
19 வயதுக்குட்பட்டோருக்கான (ஜூனியர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.
அதன்படி நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் மழை காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது.
இதனால் இந்த போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் சமிகா ஹீனடிகலா (42 ரன்), விமத் தின்சரா (32 ரன்கள்) மற்றும் செத்மிகா செனவிரத்னா (30 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. இந்தியா தரப்பில் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சவுஹான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.