டி20 உலகக் கோப்பை: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி
மோசமான பார்ம் காரணமாக சரித் அசலன்கா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.;
கொழும்பு,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.
அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் முன்னாள் சாம்பியனான இலங்கை ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான தங்களது 25 வீரர்கள் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை டி20 அணியின் வழக்கமான கேப்டனான சரித் அசலன்கா மோசமான பார்ம் காரணமாக அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அவருக்கு பதிலாக தசுன் ஷனகா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2021 மற்றும் 2022-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர்களில் இலங்கை அணியை வழிநடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி விவரம்: தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, ஜனித் லியனகே, சரித் அசலன்கா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மிலன் ரத்நாயக்க, நுவான் துஷார, எஷான் மலிங்கா, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன், பதிரனா, தில்ஷான் மதுஷங்கா, மஹீஸ் தீக்ஷனா, துஷான் ஹேமந்தா, விஜயகாந்த் வியாஸ்காந்த், மற்றும் டிரவீன் மேத்யூ.