ஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.;
image courtesy:BCCI
துபாய்,
19 வயதுக்குட்பட்டோருக்கான (ஜூனியர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
அதன்படி நடைபெற்ற ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடின. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் மழை காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது.
இதனால் இந்த போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சமிகா ஹீனடிகலா 42 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சவுஹான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆயுஷ் மாத்ரே 7 ரன்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஆரோன் ஜார்ஜ் - விஹான் மல்ஹோத்ரா இணை சிறப்பாக ஆடியது. மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்து கவனமாக ஆடிய இவர்கள் இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 139 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளது. ஆரோன் ஜார்ஜ் 58 ரன்களுடனும், விஹான் மல்ஹோத்ரா 61 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் ரசித் நிம்சாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.