டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் பிரீமியர் பவுலர்....அஸ்வின்
டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் தான் பிரீமியர் பவுலர் என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்;
சென்னை ,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர். பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் .
இந்நிலையில் டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் தான் பிரீமியர் பவுலர் என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பே, அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவன் அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏன் இந்தியாவின் பிரீமியர் பவுலர்களில் ஒருவர் என்பதை அவர் காட்டினார்.இந்திய அணியில் பும்ரா இருக்கும்போது, மக்கள் அர்ஷ்தீப் சிங்கை பற்றி அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் பிரீமியர் பவுலர் என்று கூறுவேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.