முதல் ஒருநாள் போட்டி: விராட் கோலி சதம் விளாசி அசத்தல்
ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 52-வது சதமாக இது பதிவானது.;
ராஞ்சி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் இறங்கினர். இதில் ஜெய்வால் 18 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் விராட் கோலி கை கோர்த்தார்.
தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணிக்கு வலு சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் வந்த கெய்க்வாட் (8 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (13 ரன்கள்) நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலைத்து விளையாடி அணிக்கு வலு சேர்த்தார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்த அவர் பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது.
தற்போது வரை இந்திய அணி 38 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல். ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.