முதல் ஒருநாள் போட்டி: விராட், ரோகித் அரைசதம் அடித்து அசத்தல்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.;
ராஞ்சி,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியின் வழக்கமான கேப்டன் பவுமாவுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக மார்க்ரம் தெரிவித்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்தனர்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வலு சேர்த்தது. 2-வது விக்கெட்டுக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.
இவர்களில் விராட் கோலி சிக்சர் அடித்து முதலில் அரைசதம் கடந்தார். சிறிது நேரத்திலேயே ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது வரை இந்திய அணி 19 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 64 ரன்களுடனும், ரோகித் சர்மா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.