ஒருநாள் கிரிக்கெட்: பாக்.வீரர் அப்ரிடியின் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

இந்த பட்டியலில் மகேந்திரசிங் தோனி 5-வது இடத்தில் உள்ளார்.;

Update:2025-11-30 15:17 IST

ராஞ்சி,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் இறங்கினர். இதில் ஜெய்வால் 18 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் விராட் கோலி கை கோர்த்தார்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணிக்கு வலு சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார். அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கி உள்ளார்.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 3 சிக்சர்கள் விளாசினார். இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை அவர் அடித்த சிக்சர்களின் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்தது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடியின் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ரோகித் சர்மா - 352 சிக்சர்கள்

2. ஷாகித் அப்ரிடி - 351 சிக்சர்கள்

3. கிறிஸ் கெயில் - 331 சிக்சர்கள்

4. சனத் ஜெயசூர்யா - 270 சிக்சர்கள்

5. மகேந்திரசிங் தோனி - 229 சிக்சர்கள் 

Tags:    

மேலும் செய்திகள்