ஆசிய கோப்பை: ஓமன் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது;
அபுதாபி,
8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இதன் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அரங்கேறும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஓமனுடன் ( ‘ஏ’ பிரிவு) மோதுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, கில் ஆகியோர் களமிறங்கினர். கில் 5 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார் . மறுபுறம் அபிஷேக் ஷர்மா பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார்.
சிறப்பாக விளையாடிய அவர் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அக்சர் படேல் 26 ரன்கள், திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் அரைசதமடித்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது . தொடர்ந்து 189 ரன்கள் இலக்குடன் ஓமன் அணி விளையாடுகிறது.