ஆசிய கோப்பை: யுஏஇ-க்கு எதிரான ஆட்டம்.. இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருதை வென்றது யார் தெரியுமா..?

யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.;

Update:2025-09-12 07:34 IST

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் துபாயில் அரங்கேறிய 2-வது லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய யுஏஇ அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. வெறும் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த யுஏஇ அணி 57 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர யாரும் 5 ரன்களை கூட தாண்டவில்லை. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், துபே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 30 ரன்னில் கேட்ச் ஆனார். சுப்மன் கில் 20 ரன்களுடனும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் வழங்கினார். 

 

Tags:    

மேலும் செய்திகள்