ஆசிய கோப்பை: ரன் குவிக்க தடுமாறும் சுப்மன் கில்.. இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்
நடப்பு ஆசிய கோப்பையில் சுப்மன் கில் 35 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.;
image courtesy:PTI
சென்னை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் ‘சூப்பர்4’ சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணி லீக் ஆட்டங்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து எளிதில் தோற்கடித்தது. ஓமனுக்கு எதிரான கடைசி லீக்கில் 21 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லின் பார்ம் கவலைக்குரியதாக உள்ளது. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின் டி20 அணிக்கு கம்பேக் கொடுத்த அவர் நடப்பு ஆசிய கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி வெறும் 35 ரன்கள் மட்டுமே அடித்து அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் சுப்மன் கில் மீண்டும் ரன் குவிக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது, “தற்போது சுப்மன் கில் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய வேண்டியது அவசியம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் எதிர்கால நிரந்தர கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். என்னை பொருத்தவரை மீண்டும் சுப்மன் கில் பார்முக்கு திரும்ப போட்டியின் ஆரம்பத்திலேயே கவர் டிரைவ் விளையாடுவதை தவிர்த்து பந்தினை நேராக அடித்து விளையாட வேண்டும். அவர் களத்தில் நன்றாக செட்டாகும் வரை கவர் டிரைவ் அடிக்க கூடாது” என்று கூறினார்.