ஆசிய கோப்பை: சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா..? இந்திய கேப்டன் நகைச்சுவை பதில்
ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதுகிறது.;
image courtesy:PTI
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - யுஏஇ அணிகள் மோதுகின்றன. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால் அபிஷேக் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என தகவல்கள் வெளியாகின.
ஏனெனில் பின்வரிசையிலும் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என அதிரடி வீரர்கள் உள்ளனர். அத்துடன் 2-வது விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ள ஜிதேஷ் சர்மா பினிஷிங் ரோலில் அசத்தி வருகிறார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “உங்களுக்கு பிளேயிங் லெவனை மெசேஜ் செய்கிறேன். சஞ்சு சாம்சனை நாங்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறோம். அதனால் அவரை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் சரியான முடிவை எடுப்போம்” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.