ஐதராபாத்துக்கு எதிரான தோல்வி; கொல்கத்தா கேப்டன் ரகானே கூறியது என்ன..?
ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி கண்டது.;
Image Courtesy: @IPL
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 278 ரன்கள் குவித்தது.
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 105 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 110 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் கொல்கத்தா கேப்டன் ரகானே அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டியில் ஐதராபாத் வீரர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பந்துவீச்சின் போது நாங்கள் செய்த தவறுகளை பயன்படுத்தி ஐதராபாத் வீரர்கள் ரன்கள் குவித்து விட்டனர். அதிலும் குறிப்பாக மோசமான பந்துகளை தவறாமல் அடித்த சன்ரைசர்ஸ் வீரர்கள் நாங்கள் வீசிய நல்ல பந்துகளையும் அடித்து நொறுக்கினர்.
அதேவேளையில் இரண்டாம் பாதியில் அவர்களது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. அதனால் எங்களால் பெரிய அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. பந்துவீச்சின் போது நாங்கள் பல விதமாக பந்துவீசினாலும் சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் ரன்களை குவித்தனர். அதனால் பந்துவீச்சில் எங்களால் சரியான திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
இந்த தொடரில் இரண்டு மூன்று போட்டிகள் எங்களுக்கு நெருக்கமான போட்டிகளாக அமைந்தும் அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். டி20 கிரிக்கெட்டில் இது போன்ற தோல்விகள் நிகழக்கூடிய ஒன்றுதான். நிச்சயம் இந்த தொடரில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து அடுத்த ஆண்டு வலுவாக திரும்பி வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.