20 ஓவர்கள் விளையாட இந்தியாவுக்கு 8 பேட்ஸ்மேன்கள் தேவையா..? அதுவும் பாக்.போன்ற.. - ஸ்ரீகாந்த்

ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.;

Update:2025-09-13 20:16 IST

சென்னை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.

இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை (14-ம் தேதி) நடைபெற உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

முன்னதாக நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி பும்ராவை மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கொண்டு களமிறங்கி விளையாடியிருந்தது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபேவை பேக் அப் வேகப்பந்து வீச்சாளர்களாக பயன்படுத்தியது.

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு நிச்சயம் 2-வது முழுநேர வேகப்பந்து வீச்சாளர் அவசியம் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக நட்சத்திர பவுலரான அர்ஷ்தீப் சிங்கை களமிறக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 20 ஓவர்களை எதிர்கொள்ள 8 பேட்ஸ்மேன்கள் தேவையில்லை என்று இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “முதல் போட்டியிலேயே அர்ஷ்தீப் விளையாடியிருக்க வேண்டும் என்று நான் சொன்னேன். 20 ஓவர்கள் விளையாட இந்தியாவுக்கு 8 பேட்ஸ்மேன்கள் தேவையா? குறிப்பாக பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக, 8 பேட்ஸ்மேன்கள் தேவையா? நான்குக்கும் மேற்பட்ட பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. பிரச்சினை என்னவென்றால், எல்லாமே சுழற்பந்து வீச்சை மையமாகக் கொண்டதாக மாறிவிட்டது, மேலும் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறிய உதவியும் இல்லை. பாகிஸ்தானே சுழற்பந்து வீச்சை அதிகமாக விரும்பி விளையாடத் தொடங்கிவிட்டது, அதனால் அவர்கள் ஹாரிஸ் ரவுப்பை கைவிட்டுவிட்டனர்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்