ரூ.4.2 கோடிக்கு ஏலம் போன டான் பிராட்மேன் தொப்பி
டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை இதுவரை எந்தநாட்டு பேட்ஸ்மேன்களும் முறியடிக்கவில்லை.;
சென்னை,
1947-48 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது டான் பிராட்மேன் அணிந்திருந்த "பச்சை நிற" தொப்பி நேற்று ஏலத்தில் ரூ.4.2 கோடிக்கு விற்கப்பட்டது.
பிராட்மேன் அதை இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு பரிசாக வழங்கினார். 1947-48ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என இழந்தது. அந்த தொடரின்போது அப்போதைய இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய பச்சை நிறத் தொப்பியை பரிசாக கொடுத்திருந்தார் டான் பிராட்மேன். அவருடைய குடும்பத்தினர் அதை கடந்த 75 ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகின்றனர்.
வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பரவலாகக் கருதப்படும் பிராட்மேன், 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6,996 ரன்கள் சேர்த்து தனது சராசரியை 99.94 என வைத்துள்ளார். இவரின் 21 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் 29 சதங்களை விளாசியியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை இதுவரை எந்தநாட்டு பேட்ஸ்மேன்களும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.