ஷசாங்க் சிங்கை திட்டிய விவகாரம்: ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய முன்னாள் வீரர் ஆதரவு

மும்பைக்கு எதிரான தகுதி சுற்று 2 ஆட்டத்தில் ஷசாங்க் சிங் ரன் அவுட் ஆனார்.;

Update:2025-06-03 20:52 IST

image courtesy:PTI

மும்பை,

10 அணிகள் பங்கேற்றிருந்த ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதன் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

முன்னதாக இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அந்த போட்டியின் முக்கியமான தருணத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனான ஷசாங்க் சிங் அலட்சியமாக ஓடி ரன் அவுட் ஆனார். இதனால் கோபமடைந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே வைத்து ஷசாங்க் சிங்கை திட்டினார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் செய்தது தவறு என்று சிலர் விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- "ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அளவிற்கு கோபப்பட்டு இருக்கக் கூடாது என சிலர் சொல்கிறார்கள். நான் தோனி உடன் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவரை எல்லோரும் நிதானமானவர் அமைதியானவர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவரும் பல வீரர்களை திட்டி இருக்கிறார். நேரம் வரும்போது ஒரு கேப்டனாக நீங்கள் திட்டவும் செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் செய்தது ஏன் சரி? நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக அவுட் ஆகும் பொழுது அது கேப்டனை எந்த விதத்திலும் கோபமடைய வைக்கவோ கவலையடைய வைக்கவோ செய்யாது. நீங்கள் அணிக்காக சிக்சர் அடிக்க ஏதாவது முயற்சி செய்து ஆட்டம் இழந்தால் அதில் எந்த தவறும் கிடையாது. இது டி20 கிரிக்கெட்.

ஆனால் வெற்றி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இப்படி அலட்சியமாக ரன் அவுட் ஆனால் அது அணியின் வெற்றியை பாதிக்கும். இதைத்தான் அந்த நேரத்தில் ஷசாங்க் சிங் செய்தார். அவர் சிறப்பான வீரர் சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறார். ஆனால் அந்த ரன் அவுட்டில் அவர் மிகவும் அலட்சியமாக இருந்தார். இதனால்தான் ஸ்ரேயாஸ் ஐயர் அவர் மீது கோபமடைந்தார். நான் அவருடன் முழுமையாக உடன்படுகிறேன்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்