கில் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் ஆனால்.... - முகமது கைப்
இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 19-ந் தேதி பெர்த்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா ஒரு வீரராக அணியில் நீடிக்கிறார். விராட் கோலியும் ஒருநாள் போட்டி அணியில் அங்கம் வகிக்கிறார்.
இந்நிலையில், ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு முன்னாள் வீரர் முகமது கைப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இந்திய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதவில் தெரிவித்திருப்பதாவது, ‘ரோகித் சர்மா 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறார். ஆனால் உங்களால் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு கேப்டன்ஷிப்பை கொடுக்க முடியவில்லை. ஒரு கேப்டனாக ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் 16 ஆட்டங்களில் 15-ல் வெற்றி பெற்றுள்ளார். ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி இருக்கிறார். அது 2023-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியாகும்.
அவர் கடைசியாக கடந்த மார்ச்சில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடி இருந்தார். அதில் கோப்பையை வென்று தந்ததுடன் ஆட்டநாயகனாகவும் ஜொலித்தார். 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியையும் வென்று தந்தார்.
8 மாதங்களில் 2 ஐ.சி.சி. கோப்பை வென்று தந்த கேப்டனை மாற்றி விட்டு, சுப்மன் கில்லை கொண்டு வந்துள்ளீர்கள். கில் இளம் வீரர். அவரால் சிறந்த கேப்டனாக இருக்க முடியும். அதற்காக ஏன் அவசரப்பட வேண்டும்? அவருக்கான நேரம் வரும். இது ரோகித்தின் நேரமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.