நிதிஷ் ரெட்டிக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்; இந்திய முன்னாள் வீரர்கள் ஆதரவு
இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது.;
டெல்லி,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5டி2, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது.
அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி பேட்டிங்கில் 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் 2 ஓவர்கள் வீசி 13 ரன்களை கொடுத்தார்.
இந்திய அணியின் தோல்விக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரயன் டென் டெஸ்கட்ச், நிதிஷ் ரெட்டிக்கு பல வாய்ப்புகள் கொடுத்தும், அந்த வாய்புகளில் அவர் தோல்வியடைந்துள்ளார்’ என்று கூறினார். இதனால், நிதிஷ் ரெட்டிக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், நிதிஷ் ரெட்டிக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளார். நிதிஷ் ரெட்டிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் உத்தப்பா கூறுகையில், ஆல் ரவுண்டராக இருப்பது சுலபம் அல்ல. நீங்கள் இரு திறமையிலும் வல்லமைபெற்றிருக்க வேண்டும். ஜடேஜாவோ, ஹர்திக் பாண்டியாயோ ஒரே இரவில் அந்த திறமையை பெற்றிருக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் போதிய வாய்ப்பும், நேரமும் வழங்கப்பட்டது. நிதிஷ் ரெட்டிக்கும் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்றார்.
அதேபோல், நிதிஷ் ரெட்டிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நிதிஷ் ரெட்டியை 7வது இடத்தில் பேட்டிங் ஆட வைக்கிறோம். அந்த இடத்தில் அவர் பேட்டிங் ஆட குறைவான வாய்ப்பே உள்ளது. அவர் சில ஓவர்களே வீசுகிறார். நீங்கள் போதிய வாய்ப்பு வழங்கவில்லையென்றால் தொடக்க வீரராகவோ, முதல் ஓவரை வீசும் வீரராகவோ இல்லாத இளம்வீரர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினமான காரியம்’ என்றார்.