ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த குவைத்

குவைத் தரப்பில் அதிகபட்சமாக யாசின் படேல் 58 ரன்கள் அடித்தார்.;

Update:2025-11-08 08:22 IST

image courtesy:twitter/@HongKongSixes

ஹாங்காங்,

ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நேற்று தொடங்கியது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் அங்கம் வகிப்பார்கள். இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் குவைத் உடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குவைத் நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யாசின் படேல் 58 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபிமன்யு மிதுன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 107 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 5.4 ஓவர்களில் 79 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் குவைத் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்தியா தரப்பில் அபிமன்யு மிதுன் 26 ரன்கள் அடித்தார். குவைத் தரப்பில் யாசின் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். யாசின் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்