ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: 80 இடங்கள் முன்னேறிய பிரெவிஸ்
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார்.;
image courtesy:ICC
துபாய்,
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 போட்டிகளில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு டி20 தொடரில் சொதப்பி வரும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2-ல் இருந்து 4-வது இடத்துக்கு சரிந்தார். இதனால் 3-வது இடத்தில் இருந்த இந்தியாவின் திலக் வர்மா 2-வது இடத்துக்கும், இங்கிலாந்தின் பில் சால்ட் 3-வது இடத்துக்கும் முன்னேறினர். இதில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 125 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவால்ட் பிரேவிஸ் 80 இடங்கள் எகிறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் 6 இடங்கள் உயர்ந்து 10-வது இடத்தை பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி, இங்கிலாந்தின் அடில் ரஷித், வெஸ்ட் இண்டீசின் அகீல் ஹூசைன், இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகிறார்கள்.