கிரிக்கெட்டை விட்டே சென்று விடலாம் என்று..- ரோகித் சர்மா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.;
image courtesy:PTI
மும்பை,
இந்தியாவில் கடந்த 2023-ல் நடைபெற்ற ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் ஆரம்பம் முதலே மிரட்டலாக செயல்பட்டு வந்த இந்தியா அரையிறுதியில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்தது.
ஆனால் அகமதாபாத் மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இது அந்த சமயம் பலரிடையே கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த சமயத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மனதளவில் அதிகமாக காயத்தை சந்தித்தார். விராட் கோலி களத்திலேயே கண்ணீர் மல்க நின்றார்.
இந்நிலையில் அந்த தோல்வியோடு கிரிக்கெட்டை விட்டு விடலாம் என்று நினைத்தாக ரோகித் சர்மா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “எல்லோரும் ஏமாற்றமடைந்தனர். என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. அது எனக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. ஏனென்றால் நான் அந்த உலகக் கோப்பையில் எல்லாவற்றையும் முதலீடு செய்தேன். நான் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்தே அதற்காக நிறைய செய்தேன்.
உலகக்கோப்பையை வெல்வதே எனது ஒரே குறிக்கோளாக இருந்தது. அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, 2023 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி. எனவே அது நடக்காதபோது, நான் முற்றிலும் நொறுங்கிப் போனேன். என் உடலில் எந்த சக்தியும் இல்லை. அதிலிருந்து நான் மீண்டு வர எனக்கு இரண்டு மாதங்கள் ஆனது.
நான் மனதளவில் மிகவும் சோர்வடைந்து விட்டேன். என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு எதுவும் இல்லாமல் விட்டு சென்ற கிரிக்கெட்டையே விட்டு விடலாம் என்று எண்ணினேன். சிறிது நேரம் தேவைப்பட்டது. நான் மிகவும் நேசித்தது என் கண் முன்னே இருந்த கிரிக்கெட்தான். அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க முடியவில்லை. மெதுவாக என்னை தேற்றிக் கொண்டு, வலுப்பெற்று மீண்டும் மைதானத்திற்கு திரும்பினேன்.
நீங்கள் ஏதாவது ஒன்றில் இவ்வளவு முதலீடு செய்து, முடிவை அடையவில்லை என்றால், அது மிகவும் இயல்பான எதிர்வினை என்று நினைக்கிறேன். எனக்கும் அதுதான் நடந்தது. ஆனால் வாழ்க்கை அங்கு முடிவடையாது என்பதையும் நான் அறிந்தேன். ஏமாற்றத்தை எவ்வாறு சமாளிப்பது, மீட்டமைப்பது மற்றும் புதிதாகத் தொடங்குவது என்பது பற்றிய ஒரு பெரிய பாடமாக அது எனக்கு இருந்தது. இப்போது இதைச் சொல்வது மிகவும் எளிதானது, ஆனால் தற்போது அது மிகவும் கடினமாக இருந்தது” என்று கூறினார்.