ஐ.சி.சி. டி20 தரவரிசை: இந்திய வீரர்கள் ஆதிக்கம்

டி20 போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் உள்ளார்.;

Update:2025-09-25 06:23 IST

துபாய்,

டி20 போட்டியில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் என 3 வரிசையிலும் இந்திய வீரர்களே முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 907 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து வீரர் பில் சால்ட் (844 புள்ளி) 2-வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா (791 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் (785) ஒரு இடம் பின்தங்கி 4-வது இடத்திலும் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (771) 5-வது இடத்தில் தொடருகிறார். இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (729) ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 14 புள்ளிகள் அதிகரித்து 747 புள்ளிகளுடனும் முதலிடத்திலும், நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி 717 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீசின் அகீல் ஹூசைன் 707 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது (703) 12 இடம் அதிகரித்து 4-வது இடம் பெற்றுள்ளார். வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 6 இடம் உயர்ந்து 9-வது இடத்தை சொந்தமாக்கி இருக்கிறார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா (238 புள்ளி) முதலிடத்திலும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி (231) 2-வது இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்