தொடரும் ஸ்னிக்கோ மீட்டர் சர்ச்சை: வீரர்கள் ஆதங்கம்

அலெக்ஸ் கேரி 72 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பித்து சதமும் அடித்து விட்டார்.;

Update:2025-12-19 13:08 IST

அடிலெய்டு,

கிரிக்கெட் போட்டிகளில் பந்து பேட்ஸ்மேனின் பேட் மற்றும் கையுறையில் பட்டதா? இல்லையா என்பதை கண்டறிய ஸ்னிக்கோ மீட்டர் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக நடைபெற்று வரும் ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 72 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பித்து சதமும் அடித்து விட்டார்.

இந்த நிலையில் 2-வது நாளிலும் இதே சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்து வீரர் ஜாமி சுமித் 16 ரன்னில் நின்றபோது கம்மின்ஸ் வீசிய பந்து அவரது கையுறையில் உரசியதுடன் ஹெல்மெட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற உஸ்மான் கவாஜாவிடம் சிக்கியது. கள நடுவர் அவுட் வழங்க மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியினர் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தனர். இதனை ஆய்வு செய்த 3-வது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார். ஏனெனில் பந்து பேட் அல்லது கையுறையில் பட்டு சென்றதற்கான அதிர்வை ஸ்னிக்கோ மீட்டர் சரியாக காட்டவில்லை.

இதேபோல் அவர் 22 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனார். அந்த அவுட்டை எதிர்த்து ஜாமி சுமித் அப்பீல் செய்தார். இதையடுத்து ரீப்ளேயை பார்த்த போது பந்துக்கும், பேட்டுக்கும் சற்று இடைவெளி இருப்பது போல் தெரிந்தது. ஆனால் ஸ்னிக்கோ மீட்டர் பந்து பேட்டில் உரசியதற்கான அடையாளத்தை காட்டியது. அதன் அடிப்படையில் நடுவரும் அவுட்டை உறுதி செய்தார். இதனால் ஸ்னிக்கோ மீட்டரின் முடிவுகள் விவாதப்பொருளாகி இருக்கிறது.தவறான முடிவுகளால் போட்டியின் முடிவே மாறி விடுவதால் இந்த தொழில்நுட்பத்துக்கு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய இந்த ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பத்தை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்