20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை இந்தியா கைப்பற்றுமா?
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.;
ஆமதாபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக், தர்மசாலா ஆட்டங்களில் இந்தியாவும், சண்டிகாரில் நடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த 4-வது 20 ஓவர் போட்டி கடுமையான பனிமூட்டத்தால் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. என்றாலும் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விரு அணிகளும் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டி என்பதால் வெற்றியோடு நிறைவு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் தான் கவலையளிக்கிறது. கடைசி 21 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த ஆட்டத்திலாவது நிலைத்து நின்று ரன்வேட்டை நடத்துவாரா? என்பதை பார்க்கலாம். கால் விரலில் காயமடைந்த துணை கேப்டன் சுப்மன் கில் ஆடுவது சந்தேகம் தான். அனேகமாக அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக முந்தைய ஆட்டத்தில் விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி விட்டார். மற்றபடி ‘நம்பர் ஒன்’ பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் சீரற்றதாக இருக்கிறது. 2-வது ஆட்டத்தில் 213 ரன்கள் குவித்த அந்த அணி மற்ற இரு ஆட்டங்களில் 120-ஐ கூட தொடவில்லை. எனவே தவறுகளை திருத்தி கொண்டு அதிக ரன் திரட்டுவதை எதிர்நோக்கியுள்ளனர். அத்துடன் இது பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் தொடரை கைப்பற்ற இந்தியாவும், சமன் செய்ய தென்ஆப்பிரிக்காவும் வரிந்து கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. ஆமதாபாத்தில் பனிமூட்டம் சிக்கல் இருக்காது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் ஆட்டம் தடங்கலின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் இதுவரை ஏழு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 2023-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 234 ரன்கள் குவித்தது அதிகபட்சமாகும். அதே ஆட்டத்தில் நியூசிலாந்து 66 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் அல்லது சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா அல்லது வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் பெரேரா, மார்கோ யான்சென், கார்பின் பாஷ், ஜார்ஜ் லின்டே அல்லது கேஷவ் மகராஜ் அல்லது அன்ரிச் நோர்டியா, லுங்கி இங்கிடி, பார்த்மேன்.
இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.