ஐ.பி.எல்.: இரண்டே நாட்களில் 3 வீரர்களிடம் கை மாறிய ஆரஞ்சு தொப்பி

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுகிறது.;

Update:2025-04-29 09:53 IST

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும், சாய் சுதர்சன் 39 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியும், யஷஸ்வி ஜெய்வாலும் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 166 ரன்களாக உயர்ந்த போது (11.5 ஓவர்) சூர்யவன்ஷி 101 ரன்களில் (38 பந்து, 7 பவுண்டரி, 11 சிக்சர்) பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

முடிவில் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 70 ரன்களுடனும், கேப்டன் ரியான் பராக் 32 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது வென்றார்.

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை நேற்று முன்தினம் சாய் சுதர்சனிடம் இருந்து  மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் (427 ரன்) வசப்படுத்தினார். அவரிடமிருந்து அதே நாளில் நடைபெற்ற 2-வது போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி (443 ரன்) தட்டிப்பறித்தார்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 39 ரன்கள் அடித்த சாய் சுதர்சன் மீண்டும் ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தினார். சாய் சுதர்சன் 9 ஆட்டங்களில் விளையாடி 5 அரைசதம் உள்பட 456 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

o

Tags:    

மேலும் செய்திகள்