சிறப்பாக ஆடியும் அவர் பெஞ்சில் இருப்பதை பார்க்க... - இந்திய முன்னாள் வீரர் வேதனை

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.;

Update:2025-12-13 17:58 IST

image courtesy:PTI

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இறங்கி வருகிறார். மறுபுறம் விக்கெட் கீப்பர் இடத்தில் ஜிதேஷ் சர்மா இறங்கி வருகிறார். இதில் சுப்மன் கில் மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். இதனால் கில்லை நீக்கி விட்டு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

முன்னதாக டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 3 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் சுப்மன் கில்லை ஆல் பார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கும் தேர்வுக்குழு அதற்காக சாம்சனை கழற்றி விட்டு அவருக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பை கொடுத்துள்ளது. அந்த வாய்ப்பில் இதுவரை சுப்மன் கில் சுமாராக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் துணை கேப்டனாக இல்லாமல் போனால் சுப்மன் கில் டி20 அணியில் விளையாடும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். அத்துடன் திறமையான சஞ்சு சாம்சன் பெஞ்சில் இருப்பதை பார்ப்பது மனதிற்கு வலியை கொடுப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “சஞ்சு சாம்சன் மூன்று சதங்கள் அடித்துள்ளார். நாம் டி20 கிரிக்கெட்டை பற்றி பேசுகிறோம். அதில் அவர் மூன்று சதங்கள் அடித்துள்ளார். ஒரு வீரராக உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்ட ஒரு வீரர் பெஞ்சில் இருப்பதை பார்ப்பது வலிக்கிறது.

சுப்மன் கில் அணியின் துணை கேப்டன். பொதுவாக கேப்டன் அல்லது துணைக் கேப்டனாக இருப்பவர் மட்டுமே பிளேயிங் லெவனில் உறுதியாக விளையாட வேண்டியவர்கள். அதன் அடிப்படையில் கில் விளையாடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் இந்திய டி20 அணியில் திறமைக்கு பஞ்சமில்லை” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்