ஐ.பி.எல். ஏலம்: அதிக தொகைக்கு விலை போகக்கூடிய டாப்-5 வீரர்களை கணித்த ஆகாஷ் சோப்ரா
ஐ,பி.எல். மினி ஏலம் 16-ம் தேதி நடைபெற உள்ளது.;
மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இந்நிலையில் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போகக்கூடிய டாப்-5 வெளிநாட்டு வீரர்களை இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “நான் மதீஷா பதிரனா, டேவிட் மில்லர் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரை 5வது இடத்தில் வைத்திருக்கிறேன். நார்ட்ஜே மற்றும் மில்லர் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டால், அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுவார்கள். அதேபோல் கூப்பர் கானொலியும் விருப்பமாக இருக்கிறார். இவர்கள் இருவரையும் 4-வது இடத்தில் வைத்திருக்கிறேன்.
3-வதாக லியாம் லிவிங்ஸ்டன். அவர் ஒரு மோசமான ஆட்டக்காரர், பஞ்சாப் அணியாக இருந்தாலும் சரி, ஆர்சிபி அணியாக இருந்தாலும் சரி, அவர் சரியாக ஆடவில்லை. ஆனால், இப்போது ஏலத்தில் அதிகப்படியான அதிரடி ஆல் ரவுண்டர்கள் இல்லை. மேக்ஸ்வெல் கூட இப்போது இல்லை. எனவே, இந்த முறையும் லிவிங்ஸ்டன் பணம் சம்பாதிப்பார் என்று நினைக்கிறேன்.
ஜானி பேர்ஸ்டோவை நான் 2வது இடத்தில் வைத்திருக்கிறேன். அவர் நிறைய ரன்கள் எடுத்துள்ளார், கடந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். நிறைய அணிகள் அவரை துரத்தும்.
கேமரூன் கிரீன் நம்பர் 1 இடத்தில் இருப்பார், அவரை நெருங்க யாரும் இல்லை. இறுதி விலை எவ்வளவு என்றாலும், அவருக்கு அதிகபட்சமாக 18 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஏலம், ஒரு சரியான போராக இருக்கலாம். உண்மையில் அவர் 25 முதல் 28 கோடி ரூபாய் வரை செல்லலாம்” என்று கூறினார்.